பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றமை தொடர்பில் எதிர்காலத்தில் பின்பற்ற எதிர்பார்க்கும் வழிமுறைகள் குறித்து தௌிவுபடுத்தி, பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் இன்று அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் என்பதற்கு பதிலாக ‘தேசிய பிறப்புச் சான்றிதழ்’ என்றே கூறப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும் தேசிய பிறப்புச் சான்றிதழில் பிறப்பின் போது வழங்கப்படும் அடையாள இலக்கமும் உள்ளடக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
மிக பாதுகாப்பான கடதாசியில் டிஜிட்டல் முறையில் அச்சிடப்படவுள்ள தேசிய பிறப்புச் சான்றிதழில், பார் கோட் அடையாளம், அதற்கான இலக்கம், WATER MARK உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடனேயே தேசிய பிறப்புச் சான்றிதழ் விநியோகிக்கப்படவுள்ளது.
சிறார்களைப் பாதிக்கும் விடயமாக பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் பெற்றோரின் திருமண நிலை தொடர்பான விடயம் பிறப்புச் சான்றிதழில் இருந்து அகற்றப்படவுள்ளது.
எனினும், பெற்றோரின் குடியுரிமை தொடர்பில் தேசிய பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தேசிய பிறப்புச் சான்றிதழ் மக்கள்மயப்படுத்தப்படவில்லை எனவும், இதற்கான பணிகள் நிறைவு பெற்றவுடன் அதனை மக்கள்மயப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பதிவாளர் நாயகம் என்.சி. விதானகேவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.