பாடசாலை பரீட்சைத் தேர்வுகள் பற்றிய செய்தி போலியானது!
“பாடநூல் கல்வி முறை இல்லாதொழிக்கப்பட்டு, பாடசாலைகளில் செயல் நூல் அடிப்படையிலான கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் 2023ஆம் ஆண்டுடன் பாடநூல் கற்றலை அடிப்படையாகக் கொண்ட பரீட்சை முறை முடிவுக்கு வரும்” என கல்வி மற்றும் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூர கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் கலாநிதி உபாலி சேதர கூறியதாக 14.02.2021 அன்று ‘சிலுமின’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது குறித்து கலாநிதி உபாலி சேதரவை வினவியபோது, 2023 ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கான தேர்வுகள் முற்றிலுமாக ரத்துச் செய்யப்படும் என பத்திரிகையில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், ஆனால் 2023 முதல் பாடசாலைகளில் மாணவர்களின் தேர்வுகளை நடத்தும்போது செயன்முறை பாடத்திட்ட முறையொன்று அறிமுகப்படுத்தப்படுவது குறித்து தற்போது கலந்துரையாடி வருவதாகவும் கூறினார். அத்துடன் பத்திரிகைக்கு தான் கூறிய கருத்து தவறாக வழிநடாத்தும் வகையில் பிரசுரமாகியுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.