விமல் வீரவங்ச போன்றவர்கள் வெளியேறினாலும் கூட, அதே அளவுக்கு சிங்கள இனவாதத்தையும், தேசியவாதத்தையும் கையில் எடுத்திருக்கும் சரத் வீரசேகர போன்ற வேறு பல தலைவர்களை ராஜபக்ச தரப்பு தனது பக்கம் வைத்திருக்கின்றது.
கடந்த தேர்தலின் போது கொழும்பு மாவட்டத்தில் பஷில் ராஜபக்சவினால் களமிறக்கப்பட்ட சரத் வீரசேகர விமல் வீரவங்சவிலும் பார்க்க அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டிருந்தார் என்ற விடயத்தையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.
ஆகவே, சிங்கள தீவிர தேசியவாத தரப்பு ஒரு தனி அணியாக தேர்தலில் குதித்தாலும் கூட, கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூற முடியாது. இறுதிக் கட்டத்தில் எப்படியும் சிங்கள வாக்காளர்கள் ராஜபக்சகளுடன் சேர்ந்து கொள்ளவே விரும்புவார்கள்.
அதற்கான வியூகங்களை வகுக்கும் நோக்கத்துடனேயே இப்பொழுது பஷில் ராஜபக்ச அரசாங்கத்திற்குள் எடுத்து வரப்படுகின்றார் என ஊகிக்க முடிகின்றது.
பிரதேச சபை மட்டம் வரையில் SLPP வாக்கு வங்கியுடன் நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வரும் பஷில் ராஜபக்சவை அரசாங்கத்தின் ஒரு மூன்றாவது முகமாக – லிபரல்வாத, சிறுபான்மை நட்பு முகமாக – எடுத்து வந்து, தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்திக் கொள்வதே அவர்களுடைய இறுதி நோக்கமாக இருந்து வருவது போல் தெரிகிறது.