இஸ்லாமியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். பௌத்தர்கள் தமது பண்பாட்டிலே மிக அக்கறையாக இருக்கின்றனர். ஆனால் எத்தனையோ உயிர்களை இழந்த தமிழர்கள்தான் தமிழர் பண்பாட்டை தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் என்று ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
தமிழி வழங்கும் தமிழ் வேள்வி நிகழ்வு யாழ். பல்கலைக் கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஆசியுரை வழங் கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்துள்ளவை வருமாறு, எந்தவொரு அமைப்பை உருவாக்கினாலும் அதன் ஆயுள் பலத்தை அதைச் சார்ந்தவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழுக்குப் பல அமைப்புகள் உருவாகுவதும் பின்னர் மருகிப் போவதும் வழக்கமாகிவிட்டது.
அந்தச் சூழ்நிலை மாற வேண்டும்.தமிழ் வேள்வி அதற்கும் உதவ வேண்டும். தமிழ் மன்னர்களின் செய்திகளையே கூறப் பயன்பட்ட முரசு பயன் பாட்டில் இல்லை. தற்போது மேலைத்தேய வாத்தியம் போன்று பழக்கத்துக்கு வந்துள்ளது. எமது முரசு எமது பாரம்பரியமான கருவி அது அருகிப் போகின்றது.
தற்போது இன்னிசைத் தமிழ்விழா, பாடசாலை நிகழ்வுகள் என்று இறுதி நிகழ்வு வரையில் வந்துவிட்டது. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் பண்பாட்டு அக்கடமி, இந்து நாகரீகத் துறை, தமிழ்த் துறை, இந்துத் துறை என்பன இருந்தும் இந்த தமிழர் பண்பாட்டையார் காப்பாற்றுகின்றனர்.
தற்போது பலகலைக் கழகத்தில் விரிவுரையாளர்களையும் அடையாளம் தெரியவில்லை. பணியாளரையும் அடையாளம் தெரியவில்லை. மாணவர்களையும் அடையாளம் தெரியவில்லை.
இதனைப் பழிப்பதற்காக நான் கூறவில்லை. பண்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றோம். இஸ்லாமியர்கள் தமது பண்பாட்டைக் காப்பாற்றுகின்றனர். பௌத்தர்கள் தமது பண்பாட்டில் மிக அக்கறையாக இருக்கின்றனர். ஆனால் எத்தனையோ உயிர்களை இழந்த தமிழர்கள் தான் தமிழர் பண்பாட்டைத் தொலைப்பதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர்.
இந்தியாவிலே சீக்கிய இனம் இராணுவத்தில் கூட தலைப்பாகையுடன் தான் பணியாற்றுகின்றது. முதலாவது சீக்கிய துடுப்பாட்ட அணியில்கூட தமது பண்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை.
இவ்வாறான நிலையில் எத்தனையோ ஆயிரம் ஆண்டு காலத் தமிழர்கள் பழமையும் பெருமையும் பேசும் தமிழர்கள் எதையும் எந்த நேரமும் கைவிடத் தயாராக இருக்கின்றனர். இது கவலையளிக்கின்றது. அதற்குச் சினிமா மோகம், சினிமாச் சூழல், சினிமா நிகழ்வும் காரணமாக அமைகின்றது. இவை எமக்கு கவலையளிக்கின்றது-என்றார்.