படகுச் சேவை சீராகுமா? மக்கள் விசனம்
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து தொடர்பாக சரியான திட்டமிடல்கள் நேரமுகாமையின்மையால் அன்றாடம் பிரயாணம் செய்யும் மக்களும் உத்தியோகத்தர்களும் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
கடந்த சில நாட்களாக சரியான நேர திட்டமிடல்கள் இன்றி போக்குவரத்துகள் இடம் பெறுவதால் உரிய நேரத்திற்கு தங்கள் கடமைகளை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் பல அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றார்கள்.
கடந்த வாரம் வடதாரகைப் படகில் பிரயாணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டமையால் வடதாரகைப் படகு போக்குவரத்து சேவையினை இடைநிறுத்தி கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இன்றைய தினம் (ஜீலை 29) வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடுவதற்கான நேற்றைய தினம் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் சென்று அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
ஆயினும் இன்றைய தினம் சேவையில் ஈடுபடவில்லை நேற்றைய தினம் இரவு திரும்பி வருகின்ற போது கடல்வற்றுக் காரணமாக படகு தரைதட்டியதாகவும் அதனை பார்வையிட்ட பின்னரே சேவை இடம் பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது காலை 07.00 மணிக்கு படகு புறப்படும் என இறங்கு துறைமுகம் வந்த மக்கள் காத்திருந்தே பிரயாணத்தினை ஆரம்பித்தனர். அதன் பின்னரே பல.நோ.கூடடுறவுச் சங்க படகு ஒழுங்குபடுத்தப்பட்டு சேவை இடம் பெற்றது.
நேற்றைய தினம் சமுத்திரா தேவா படகு மாலை நேரம் காலதாமதமாகியே சேவையினை நெடுந்தீவில் இருந்து ஆரம்பித்து மீண்டும் இரவு வேளையே திரும்பி நெடுந்தீவிற்கு வருகை தந்தது. இது தொடர்பாக பல நோ.கூட்டுறவுச் சங்க முகாமையாளர் அவர்களுடன் தொடர்பு கொண்டபோது தமது படகில் பணி புரிந்தவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால், ஏனைய பணியாளர்கள் பணி புரிவதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அதனாலேயே காலதாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இனி சேவையில் இடுபடமாட்டாது எனவு அறிவித்தார். ஆயினும் இன்றைய நிலைமையினைக் கருத்திற்கொண்டு சமுத்திரதேவா தனது சேவையினை மேற்கொண்டது. ஒரு ஊழியருடனேயே ஆரம்பித்துள்ளது.
சமுத்திரதேவா படகும் கொரோனா பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கான மாற்று ஒழுங்குகளை மேற்கொண்டு கடற்தொழிலாளர் சமாசத்தின் படகினையோ அல்லது தனியார் படகுகளையோ ஒழுங்கு படுத்தி மக்கள் போக்குவரத்தினை ஒழுங்கான நேர முகாமைத்துவதற்கு ஒழுங்கு படுத்த உரிய திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.