நெடுந்தீவு மண்ணில் நிலையான அபிவிருத்தியை முன்னிறுத்தி ஊழலற்ற அபிவிருத்தியை பிரதேச மட்டத்தில் முன்னெடுப்பதே எமது இலக்கு என உள்ளூராட்சித் தேர்தலில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு ஈழமக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுயேற்சை குழுவாகப் போட்டியிடும் கட்சியின் தலைவர் தம்பையா நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
நெடுந்தீவு மண்ணில் கடந்த காலங்களில் பல்வேறுபட்ட அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டாலும் இன்றும் நெடுந்தீவு பின்தங்கிய பிரதேசமாக இருப்பதற்கு யார்? காரணம் என்பதை மக்கள் அறிவர்.
தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்கி அபிவிருத்தியை ஊழலால் சூறையாடலாம் என்பதே அவர்களின் எண்ணம்.
ஆனால் இன்று மக்கள் 30 வருடமாகத் தாம் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர்.
இதுவரை காலமும் உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி ரீதியாக வாக்களித்து ஏமாற்றத்துக்குள்ளான மக்கள் இம்முறை நடுநிலையான மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் யார் என்பதைத் தீர்மானித்து நெடுந்தீவு மண்ணின் அபிவிருத்தி குறித்து சிந்திக்கும் சுயாதீன அணியைப் பலப்படுத்தும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
தொடர்ச்சியாக கட்சி மாயைக்குள் சிக்குண்டு தமது சுயாதீனத்தை இழந்த நெடுந்தீவு மக்கள் மக்களுக்காக மக்கள் பிரதிநிதிகளில் இருந்து சுயாதீனமாக எழுந்திருக்கும் சுயேட்சைக் குழுவை ஆதரித்து தமக்கான தீர்வைத் தாமே பெற்றுக்கொள்ள முனைந்திருப்பது திருப்புமுனையே.
இம்முறை மக்களின் தீர்மானம் மிக்க வாக்குகளால் மக்களே மக்களை ஆளுகின்ற நிலை நெடுந்தீவில் உருவாகும் என்பதும் மகிழ்ச்சியே.
இதற்கப்பால் நெடுந்தீவு மக்கள் ஒன்றிணைந்து இதுவரை காலமும் இருந்த கட்சி அரசியலால் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை அகற்றி சுயமான பிரதேச அணியைத் தெரிவு செய்வதற்கு முன்வந்திருப்பது மாற்றத்துக்காக மார்க்கமே என்று சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடும் கட்சியின் தலைவர் தம்பையா நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
நன்றி – தினக்குரல்