வடமாகாண ஆளுநர் வேதநாயகன், நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான நோயாளர்காப்பு படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நோயாளர்காப்பு சேவை வழங்கும் ஹியூமெடிக்கா நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், நெடுந்தீவிலிருந்து நோயாளர்களை இந்த சேவையின் மூலம் தற்காலிகமாக கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சேவையின் மூலம் மாதத்திற்கு 15 முதல் 20 நோயாளர்கள் வரை மருத்துவ உதவிக்காக கொண்டு வரப்படுகின்றனர். ஹியூமெடிக்கா நிறுவனத்தின் தொண்டினை ஆளுநர் பாராட்டினார்.
கடற்படையினரும் தற்போது நோயாளர்களுக்காக படகு சேவையை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை வலியுறுத்திய ஆளுநர், இச்சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நவம்பர் மாத இறுதியில் சீரற்ற காலநிலை காரணமாக படகு சேவைகள் இடைநிறுத்தப்பட்டபோது, நெடுந்தீவிலிருந்து மூன்று நோயாளர்கள் விமானப்படையினரின் உதவியுடன் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்ட நிகழ்வையும் ஆளுநர் குறிப்பிட்டார்.