நெடுந்தீவில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், தடயப் பொருள்களை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
நெடுந்தீவில் ஒரே வீட்டில் நேற்று (ஏப்ரல் 22) ஐவர் கொலை செய்யப்பட்டிருந்தனர். மூதாட்டி ஒருவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டபோதும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவிக்கின்றார் என்று அறிய முடிகின்றது.
சந்தேகநபர் புங்குடுதீவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடொன்றில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இவர், இங்கு தனித்தே வாழ்ந்து வந்துள்ளார். சந்தேகநபர் சுற்றுலா வருவோருக்கு இடங்களைச் சுற்றிக்காட்டுவதை வழமையாகக் கொண்டுள்ளார். இவர் கடந்த 20 நாள்களுக்கு மேலாக நெடுந்தீவில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார் என்றும், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவர் கொல்லப்பட்ட மூதாட்டியின் வீட்டில் தங்கினார் என்றும் தெரியவருகின்றது.
கொலைகள் நேற்று அதிகாலை 4.30 மணியில் இருந்து 6.30 மணி வரையான நேரத்துக்குள் நடந்துள்ளன. உடல்கள் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கொலைகளை நகைகளுக்காகவே செய்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகின்றது. சந்தேகநபரிடம் இருந்து நகைகள், கைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை திட்டமிட்ட வகையில் சந்தேகநபரால் தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனால் கொலைகளுக்கு வேறு காரணங்கள் உள்ளனவா, வேறு எவருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னமும் கண்டெடுக்கப்படவில்லை. சந்தேகநபர் நேற்றுக்காலை 7 மணியளவில் நெடுந்தீவில் இருந்து புங்குடுதீவுக்குப் படகு மூலம் வந்துள்ளார். நெடுந்தீவில் இருந்து ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று இரவு சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
– இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதனால் ஆரம்பத் தகவல்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படலாம். –