புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுவீஸ் குமார் இன்று (மார்ச் 20) நீதிமன்றத்துக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்திற்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரிதிவாதிகளின் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான திகதியை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுக்களை ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் வித்தியா என்ற பாடசாலை சிறுமி 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை, யாழ் மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்நிலையில் இடம்பெற்றிருந்தது.
இந்த கொலையில் தொடர்புடைய பிரதிவாதிகள் ஏழு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
தண்டனை விதிக்கப்பட்ட விதம் சட்டத்துக்கு எதிரானது என்றும், குற்றச்சாட்டில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.