நாளை பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு தௌிவுபடுத்தியுள்ளது.
பாடசாலைகளில் வகுப்புகளின் அடிப்படையில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கல்வி அமைச்சின் செயலாளர் N.H.M. சித்ரானந்த விளக்கமளித்துள்ளார்.
200 பேருக்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட , 01 மீட்டர் இடைவௌியைப் பேணக்கூடிய அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
எனினும், 200 பேருக்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஆரம்பநிலை, இடைநிலை வகுப்புகளுக்கு அமைய வார நாட்களின் அடிப்படையில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்,
200 பேருக்கும் அதிக மாணவர்களைக் கொண்ட ஆரம்பநிலை மாணவர்கள் இருக்கக்கூடிய பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் பின்வருமாறு இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஐந்தாம் தர மாணவர்களுக்கு திங்கள் தொடக்கம் வௌ்ளி வரை அனைத்து நாட்களிலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
பிரதி திங்கட்கிழமைகளில் 01 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் 02 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி புதன் கிழமைகளில் 03 ஆம் தர மாணவர்களுக்கும் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் 04 ஆம் தர மாணவர்களுக்கும் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
01 ஆம் 02 ஆம் 03 ஆம் தர மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரமே பாடசாலை கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏனைய 04 நாட்களும் மாணவர்கள் வீட்டிலிருந்து கல்வி செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை ஆசிரியர்களால் பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆரம்பகல்வி மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் நேரத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை 200 மாணவர்களுக்கும் அதிகமாக இருக்கக்கூடிய இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரதி திங்கட்கிழமைகளில் 06 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் 07 ஆம் தர மாணவர்களுக்கும் பிரதி புதன் கிழமைகளில் 08 ஆம் தர மாணவர்களுக்கும் வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் 09 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தரம் 10, 11, 12, 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் தொடக்கம் வௌ்ளி வரை பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தரம் 06, 07, 08, 09 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 தொடக்கம் பிற்பகல் 01.30 வரை மாத்திரமே கல்வி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
தரம் 10, 11, 12, 13 மாணவர்களுக்கு காலை 07 .30 தொடக்கம் மாலை 03.30 வரை கல்வி செயற்பாடுகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.