மருத்துவம், துறைமுகம், மின்சாரம், குடிநீர், ரயில்வே, தபால், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று (மார்ச் 14) நாடு தழுவிய பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு்ள புதிய வரித் திருத்தங்கள், மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. மருத்துவ உத்தியோகத்தர்கள், தாதியர்கள், ஆய்வக சேவையாளர்கள், மருத்துவமனை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார நிபுணர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் இன்று வேலைநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
துறைமுக ஊழியர்களும் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புகையிரத லோகோமோட்டிவ் இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் ஏற்கனவே வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளன.
பணிப்பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் இன்று காலை காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரை அலுவலக புகையிரதம் ஒன்று சேவைகளை முன்னெடுத்திருந்தது.
புகையிரத பாதுகாப்புக்காக இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன.