தொழில் நிபுணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில், இன்று (மார்ச் 13) இரவு 7 மணிக்கு இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
சுகாதாரம், துறைமுகம், வங்கி உள்ளிட்ட பல முக்கிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடுமையான வரிவிதிப்பு, மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் என்பவற்றைக் குறைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த வாரம் தங்கள் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதாக தொழில் நிபுணர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு அண்மையில் எச்சரிக்கை விடுத்தது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆதரவின்றி கடந்த வாரம் பல துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன.
எவ்வாறாயினும், தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இன்று முதல் நாடு முழுவதும் பல மருத்துவமனைகளில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்படி, மேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று காலை 8 மணி முதல் அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அகில இலங்கை தாதியர் சங்கம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, அகில இலங்கை பொதுத் துறைமுக ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரச ஆதரவு தொழிற்சங்கக் கூட்டு, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பும் இந்த வாரம் எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து பணிபுரிவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று முதல் 48 மணி நேரம் பணிக்கு புறம்பான போராட்டத்தில் ஈடுபட துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதேவேளை, 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதிய பிணையெடுப்புப் பொதியைத் பெறுவதனையும், சுற்றுலாத் துறையின் ஏற்படும் முன்னேற்றங்களையும் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் சீர்குலைத்து நாட்டை ஸ்தம்பிக்கச் செய்யலாம் என இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார்.