உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியாக எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நேற்று நடத்தப்பட்ட சந்திப்பிலேயே சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைப் பெறவேண்டாம் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்புரை தொடர்பாக பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம் கோரவுள்ளது.
அரசமைப்பின்படி தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு இத்தகைய பணிப்புரை விடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவைத் தவிர வேறு எவருக்கும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்று நடந்த சந்திப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதற்கு, சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின் போது வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தினார்.