தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆதீனத்தின் தற்போதைய பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா எதிர்வரும் நவம்பர் மாதம் 9 திகதி அன்று 67 வயதை அடைந்து ஓய்வு பெற இருப்பதால் ஆதீனத்துக்கான ஐந்தாவது பேராயரைத் தெரிவதற்கான தேர்தல் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 8 ஆம் திகதி அன்று வட்டுக்கோட்டையில் இருக்கும் ஆதீனத்தின் ஷிலோ மண்டபத்திலே இடம்பெற இருக்கிறது.
24 ஆதீனங்களைக் கொண்டு அமையப்பெற்ற தென்னிந்தியத் திருச்சபை 1947 ஆம் ஆண்டு ஆரம்பித்து இந்த ஆண்டு தனது 75 ஆவது ஆண்டு நிறைவான பவளவிழாவைத் தற்போது வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ஆதீனம் தனது 5 ஆவது பேராயரைத் தெரிவு செய்யவிருப்பதும் ஒரு முக்கியவிடயமாகும்.
வணபிதா கலாநிதி வேலுப்பிள்ளை பத்மதயாளன் மற்றும் வணபிதா கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் ஆகியோர் இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஒக்ரோபர் 8ஆம் திகதி தேர்தலுக்கான பிரசாரங்கள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. 200 ஆண்டுகால வரலாற்றையுடைய அமெரிக்கன் சிலோன் மிசன் பாரம்பரியத்திலே உருவாகிய தென்னிந்தியத்திருச்சபையின் யாழ்.ஆதீனம்புகழ் மிக்க பாடசாலைகளான உடுவில் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்களையும், மக்லியோட் மற்றும் கிரீன் வைத்தியசாலைகளின் நிர்வாகத்திலே காலம் காலமாக முக்கிய பங்கு வகித்தது. ஆதீனமும் அதனுடன் நெருங்கிய தொடர்புள்ள அமெரிக்கன் சிலோன் மிசன் என்ற பதிவு செய்யப்பட்ட அமைப்பும் இலங்கையின் வடபுலத்திலே புரட்டத்தாந்து கிறீஸ்தவத்தின் வளர்ச்சிக்கும், சமூக ரீதியிலே கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கும், பதிப்புத்துறைக்கும் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன.
தென்னிந்தியத் திருச்சபையின் முதல் மூன்று பேராயர்களான சபாபதி குலேந்திரன், டேவிட்ஜெயரட்ணம் அம்பலவாணர் மற்றும் சுப்பிரமணியம்ஜெபநேசன் ஆகியோர் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய தலைவர்களாகச் செயற்பட்டனர். இன வன்முறையும், போரும் வடக்கின் தமிழ்ச் சமூகத்தைப் பாதித்த காலங்களிலே மத எல்லைகள் கடந்து தமிழ் சமூகத்துக்கு ஆறுதலாகவும், வழிகாட்டிகளாகவும் இந்தத்தலைவர்கள் இருந்ததுடன், நீதிக்கும், இன விடுதலைக்கும் குரல் கொடுத்தனர். திருச்சபை சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்ற விடயங்களிலும் கரிசனை காட்டியது.
தென்னிந்தியத்திருச்சபையின் நான்காவது பேராயராக அதி வணபிதா. கலாநிதி டானியல் தியாகராஜா தெரிவுசெய்யப்பட்ட முறை தொடர்பாக ஆதீனத்திலே பலத்த எதிர்ப்புக் குரல்கள் 2006-2007 காலப்பகுதியிலே தோன்றி, ஆதீனத்தின் ஒரு பிரிவினர் ஆதீனத்தை விட்டுப் பிரிந்து சிலோன் அமெரிக்கன் மிசன் திருச்சபையை உருவாக்கும் நிலை உருவானது. பேராயர் தியாகராஜாவின் காலம் மிகுந்த சர்ச்சைக்குரிய காலமாக இருந்தது. ஆதீனத்தின் சொத்துக்கள் முறை கேடாக விற்கப்படுகின்றன எனவும், ஆதீனத்திலே நேரடியாக அரசியல் மற்றும் இராணுவத்தின் தலையீடுகளுக்குப் பேராயர் தியாகராஜா அனுமதிக்கிறார் எனவும், ஊழியர்களின் நலன்கள் பேணப்படவில்லை எனவும், யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரியில் நியமனங்களிலே முறைகேடுகள் இருந்தன எனவும் பல குற்றச்சாட்டுக்கள் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டன பல சந்தர்ப்பங்களிலே எதிர்ப்புப் போராட்டங்களும், ஊடக அறிக்கைகளும் கூட வெளியிடப்பட்டன.
இவ்வாறான ஒரு நெருக்கடியான சூழலிலே பேராயர் தியாகராஜாவின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. புதிதாகத் தெரிவு செய்யப்படவிருக்கும் பேராயர் பிளவுபட்ட ஆதீனத்தை ஒன்றுபடுத்த வேண்டும் எனவும், சோபை இழந்து போன அதனது நிறுவனங்களுக்குப் புத்துயிர் வழங்க வேண்டும் எனவும், ஆதீனம் முறைகேடாக இழந்தசொத்துக்களை மீட்டெடுக்க வேண்டும் எனவும், ஆதீனத்திலே உள்ளக ஜனநாயகம் பேணப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் பல குரல்கள் இப்போது வெளிக்கிளம்பிவருகின்றன. தென்னிந்தியத் திருச்சபையினதும், அதன் நிறுவனங்களினதும் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கப்போகும் தீர்க்கமான ஒரு தேர்தலாக இந்தத் தேர்தலைப்பலரும் நோக்குகிறார்கள்.
(நன்றி காலைக்கதிர்)