திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பீடத்தின் ஏற்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலிருந்துவரும் பௌத்த தேரர்கள் 40 பேரடங்கிய குழு திருகோணமலை நெல்சன் தியேட்டருக்கு முன்பாக இருக்கும் நிலத்தில் புத்தர் சிலையொன்றைக் கொண்டுவந்து வைத்து, பிரித் ஓதி, அங்கிருந்து கண்டிக்குப் பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்துக்கோயிலான வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணி என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று(மே 13) சனிக்கிழமை காலை இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது குறித்த பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என்றும் வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடவேண்டாம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திருப்தியளிக்கின்றதா என்று வினவியபோது அதற்குப் பதிலளித்த சுமந்திரன், ‘காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது எனும்போதிலும் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை அடிப்படையாகக்கொண்டே இவ்விடயத்தில் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதா? இல்லையா? என்பதைத் தீர்மானிக்கமுடியும். ஏனெனில் கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட இதனையொத்த உத்தரவுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதுடன் அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. எனவே தற்போது காணி விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அவ்விடயத்தில் மாத்திரம் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாகக் கருதமுடியும்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அடையாளங்காணப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வட, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ள நிலையில், அச்சந்திப்பு நாளைய தினம் (15) மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.