நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து என்பது நீண்ட காலமாகவே பிரச்சனையாகவே காணப்படுகின்றது. ஆயினும் தற்போது படகுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ள போது நேரமாற்றங்கள், தகவல் பரிமாற்றங்கள் போன்றவற்றால் அண்மைய நாட்களில் திட்டமிடப்படாத போக்குவரத்து சேவையாக காணப்படுகின்றது.
வடதாரகை படகு தற்போது கடல் வற்றுக் காரணமாக காலையில் தனது சேவையினை வழங்க முடியாத நிலையினால் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் படகு சேவையில் ஈடுபட்டு வருகின்றது. மாலை 03.30 மணிக்கு வடதாரகை சேவையில் ஈடுபடுகின்றது.
நேற்றைய தினம் வடதாரகைப் படகு உரிய திணைக்களத் தலைவர்களுக்கு எவ்வித தகவல்களும் வழங்காது தனது சேவையினை இடை நிறுத்தியதால் மக்கள் இறங்கு துறைமுகத்தில் சில மணி நேரம் காத்திருந்தே பிரயாணத்தினை ஆரம்பித்தனர்.
வழமை போன்று 03.30 மணிக்கு பிரயாணம் மேற்கொள்வதற்காக இறங்கு துறைமுகம் வருகை தந்த மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள முடியாது இறங்கு துறைமுகத்தில் தரித்திருந்தனர் பின்னர் துறைமுகம் வருகை தந்த பிரதேச செயலாளர் அவர்கள் நிலைமையினை அறிந்து பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் படகு ஒழுங்கு படுத்தப்பட்டு பிரயாணம் மேற்கொள்ளப்பட்டது.
வடதாரகைப் படகு சேவையில் ஈடுபடாது என்பது முற்கூட்டியே உரிய திணைக்களங்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படுதல் வேண்டும். இச் செயற்றிட்டம் நடைபெறாமையால் கடந்த நாட்களிலும் மக்கள் இடையூறுகளை சந்தித்துள்ளார்கள்.
நெடுந்தீவு மக்கள் போக்குவரத்து திட்டமிட்ட நேர முகாமைத்துவத்திற்கு அமைய இடையூறின்றி திறம்பட எதிர்காலத்தில் சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக காணப்படுகின்றது.