கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 14 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ள புங்குடுதீவு J / 26 கிராமசேவகர் பிரிவில் ( பன்னிரெண்டாம் , பதினொராம் மற்றும் பத்தாம் வட்டாரத்தின் ஒரு பகுதி ) வாழ்கின்ற 270 குடும்பங்களுக்கு கிராமசேவகர் திரு . சிறீதரன் ( நிமால் ) அவர்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு செவிசாய்த்து தீவகம் தெற்கு பிரதேச செயலாளரினால் அனர்த்த முகாமைத்துவ நிதி ஒதுக்கீடு ஊடாக இருபத்தியேழு இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன .
ஒரு குடும்பத்தினருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பெறுமதிமிக்க உலருணவு பொதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது . மேற்படி உலருணவு பொருட்கள் தீவகம் தெற்கு பிரதேச செயலகம் ஊடாக புங்குடுதீவு – நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கொள்வனவு செய்யப்பட்டு அங்கேயே பொதி செய்யப்படுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது .
ஊடரங்கு காலப்பகுதியிலும் , புரவி புயல் காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்த காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக புங்குடுதீவில் தங்கி நின்றவாறு அளப்பெரிய சேவையினை மேற்படி கிராமசேவகர் சிறீதரன் ஆற்றிவருகின்றார்.
புங்குடுதீவு சார்ந்த உள்ளூர் பொது அமைப்புக்கள் , புலம்பெயர் ஒன்றியங்கள் இக்கிராமசேவகரோடு இணைந்து கலந்தாலோசித்து பணியாற்றுவது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது