சீன கப்பலில் யுரேனியம்; கப்பலை வெளியேற்றுமாறு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவிப்பு
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் H.L.அனில் ரஞ்சித் தெரிவித்தார்.
இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் என அவர் கூறினார்.
அவ்வாறு அனுமதி வழங்கப்படும் போது, குறித்த இரசாயன பொருள் என்ன, அது எந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என H.L.அனில் ரஞ்சித் சுட்டிக்காட்டினார்.
எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வௌியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், குறித்த கப்பல் துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
நெதர்லாந்தின் Rotterdam-இல் இருந்து சீனா நோக்கி பயணிக்கும் குறித்த கப்பலில் ஏற்பட்ட இயந்திரக்கோளாறு காரணமாக , கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(கோப்பு படம்- அம்பாந்தோட்டை துறைமுகம்)