குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் சிலர் திடீரென உயிரிழந்தமைக்கு சிகிச்சைக்காக வழங்கப்பட்ட இரசாயனத்தின் தாக்கமே காரணமாக இருக்கலாம் என என வைத்தியசாலையின் வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளர்கள் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையின் டயாலிசிஸ் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு கடந்த 23ஆம் திகதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதற்கான காரணத்தை கண்டறிய சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அதற்கமைவாக இரத்த மாற்றம் மற்றும் இரத்தம் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற இரு வைத்தியர்கள் அடங்கிய விசாரணைக் குழுவை நியமிக்க சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால நடவடிக்கை எடுத்துள்ளார். .
இதுதவிர குருநாகல் போதனா வைத்தியசாலையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ள நோயாளர்களை குளியாப்பிட்டிய, நாரம்மல, தம்பதெனிய, நிகவெரட்டிய மற்றும் நிக்கவெவ வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகள் அனைவரும் இரத்தமாற்ற சிகிச்சையின் போது உடலில் உள்ள இரத்த பிளேட்லெட் அளவு வேகமாகக் குறைந்த பின்னர் சிக்கல்கள் காரணமாக இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கெந்தன்கமுவவிடம் வினவியபோது, நோயாளிகள் உயிரிழந்தமைக்கான எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இதுவரையில் வெளியாகவில்லை என குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, சிகிச்சை பெற்று வந்த ஏனைய நோயாளிகளின் பாதுகாப்பு கருதி வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இன்று திங்கட்கிழமை (26 பெப்ரவரி) குருநாகலுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.