போதை மற்றும் சமூக சீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளைப் பாதுகாக்க பிரதேச மட்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் போதை மற்றும் சமூக சீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன், சர்வோதயம் அமைப்பின் அனுசரணையுடன் பிரதேச செயலகத்துடன் இணைத்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று (மே 8) காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
உதவி பிரதேச செயலாளர் சங்கீதா கோகுலதர்சன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரித்தானிய சைவத் திருக்கோவில்கள் ஒன்றியத்தின் தலைவரும், லண்டன் வோள்தம்ஸ்ரோம் கற்பகவிநாயகர் ஆலய அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, போதை மற்றும் சமூக சீர்கேட்டிலிருந்து இளைஞர் யுவதிகளைப் பாதுகாக்க பிரதேச மட்ட குழு தெரிவு செய்யப்பட்டது.