சமூகப்பொறுப்பு இல்லையேல் சமூகத் தொற்றினை கட்டுப்படுத்த முடியாது- மேயர் ஆனோல்ட் தெரிவிப்பு
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட சந்தைகளில் மாஸ்க் அணியாமல் செயற்படுவதால் சமூகத்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடங்களில் வர்த்தகர்களும் நுகர்வோரும் எந்தவிதமான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தவிடயம் சம்மந்தமாகக் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இம்மானுவல் ஆனோல்ட் நாம் பல தடவை வர்த்தகர் சங்கங்கள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இந்த விடயம் சம்மந்தமாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். எனினும் மக்களும் சரி வர்த்தகர்களும் சரி சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டபொழுது மேற்கொண்ட கடுமையான நடைமுறைகளையே தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிவரும். சந்தைகளைத் தவிர்த்து வியாபார நடவடிக்கைகளை வீதிகளில் மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சூழலையே ஏற்படுத்த விளைகின்றனர். கடந்த காலத்தில் நாடு முடக்கப்பட்ட போது ஏற்பட்ட அசௌகரியங்களைப் பற்றிய போதிய அனுபவங்கள் இருந்தும் மக்கள் பொறுப்புணர்வற்று செயற்படுவது கவலையை ஏற்படுத்துகின்றது.
சமூகத் தொற்றினைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் பொதுமக்கள் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்