வடமாகாணத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு ஜனாதிபதி, பிரதமர் தயாராகவுள்ளதாக தெரிவித்த வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் கொரோனா பரவலைத் தடுக்கும் செயற்பாடுகளுடன் போதைப்பொருள் விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் வடமாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணத் திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயல்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதோடு வினைத்திறனான செயற்பாடுகள் உள்ளிட முக்கிய விடயங்கள் சிலவற்றை சுட்டிக்காட்டினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மருத்துவ சோதனைகளுடன் போதைப் பொருட்களின் பயன்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக பாடசாலைகள் மீளச்செயற்படத் ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தினை பாதுகாத்து நல்வழிப்படுத்த முடியும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய அரசாங்கம் உள்ளிட்டோர் வட மாகாண வளரச்சிக்கான திட்டங்களுக்கு முன்னுரிமையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
எமது மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உரிய முறையில் இணங்கண்டு அவற்றை உரிய வழியில் பெற்றுத்தர மாகாண சபையும் அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை வழங்க நானும் தயாராகவுள்ளேன்.
அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அவரவர் கடமைகளைத் பொறுப்புடன் செய்து வினைத்திறனான செயற்பாடுகளின் ஊடாக மாகாணத்தின் வளர்ச்சிக்கும் மாகாண மக்களின் முன்னேற்றத்திற்கும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றார்.