கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி ஐந்தாவது நாளாக நேற்று(நவம்பர் 24) இடம்பெற்று நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கிச் சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளன. மாக்கர் பேனா ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்ற பிற்பாடே கிடைக்கப்பெறும்.
இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் பரிசோத னையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும்- என்றார்.