குறிக்கட்டுவான் துறைமுக பகுதியில் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் இன்று(நவம்பர் 25) மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து உள்ளார்.
இதன்போது அமைச்சருடன் வேலணை பிரதேச செயலாளர் ,நெடுந்தீவு பிரதேச செயலாளர் , நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளர் , வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பணிப்பாளர் மற்றும் நெடுந்தீவு கடற்படை பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீர்க்கப்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் அறிந்து கொண்டதுடன்
தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள் எழுகின்ற போது நெடுந்தீவு பகுதி கடற்கரை பொறுப்பு அதிகாரியுடன் தொடர்பு கொண்டு அது தொடர்பாக முறையிட்டு அதற்கான தீர்வுகளை கண்டு கொள்ளுமாறு அமைச்சர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் , நெடுந்தீவு உதவி பிரதேச செயலாளர் ஆகியோரிடம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் உள்ள பயணிகள் தங்குமிடம் மழை காலங்களில் ஒழுகுவதினாலும் , தூவானம் அடிப்பதனாலும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் அதனை சீராக திருத்தம் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்ததுடன் , குறிகாட்டுவான் துறைமுகத்திலும் நயினாதீவு துறைமுகத்திலும் புதிய மலசலகூடங்களை அமைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் மாறும் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிகாட்டுவான் துறைமுகத்தில் படகுசேவை மற்றும் பயணிகள் ஒழுங்குபடுத்தலில் ஈடுபடுவதற்காக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு நேரக் கணிப்பாளர்களுக்கான சீருடைகளை தைப்பதற்குரிய செலவுக்கான பணத்தை அமைச்சர் நேரடியாகவே இன்றையதினம் ஒப்படைத்து சென்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
குமுதினிப்படகு சேவை தொடர்பாகவும் , வாரத்தில் 7 நாட்களும் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் படகு பணியாளர்களது சிரமங்கள் தொடர்பிலும் இங்கு படகோட்டியுடன் நேரடியாக ஆராயப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் இருந்து பயணிகள் படகு வருகின்ற போது துறைமுகத்தில் படகினை அணைப்பதற்கு சில தடங்கல்கள் காணப்பட்டமை , துறைமுகப் பகுதியில் உள்ள மலசல கூடங்கள் மற்றும் பயணிகள் தங்குமிடங்களின் துப்புரவுகள் , படகு ஏறச் செல்லும் பயணிகளுக்கு இருந்த தடைகள் மற்றும் பயணிகளுக்கான தண்ணீர் தாங்கி வைத்தல் ஆகிய பிரச்சினைகள் இருப்பது தொடர்பில் பொது மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைமுகப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து பிரச்சனைகளை நேரடியாக பார்வையிட்டு அவற்றினை தீர்த்து வைத்தபின்னர் இன்றையதினம் நேரடியாக கண்காணிக்கும் வகையில் குறிக்கட்டுவான் துறைமுகத்திற்கு விஜயம் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.