தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அம்பாறை – நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கலையரசன் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இன்று (09) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே முழுநேர களப் பணியாளனாக மக்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவுள்ள தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
“நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரிதிநிதித்துவம் இல்லையென்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்க தலைமை தீர்க்கமான முடிவெடுத்துள்ளது.
அதற்கிணங்க, குறித்த ஆசனம் எனக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் கட்டளைக்கு அமைவாகவும் மக்களின் தேவைகளை அறிந்தும் செயற்படுவேன் என இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.