தண்ணீர்முறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி அமைக்கப்படும் விகாரைக் கட்டமைப்புக்களை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இன்று(ஜூலை 4) நேரில் சென்று பார்வையிட்டனர்.
12.06.2022 அன்று உள்ள சூழ்நிலையைப் பேண வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய கட்டளையை மீறி அந்தப் பகுதியில் கட்டுமான வேலைகள் நடைபெற்றுள்ளமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா நிலைமைகளை ஆராய்ந்ததுடன், தொல்லியல் திணைக்களத்தால் அங்கு திரைநீக்கம் செய்யப்பட்டுள்ள நினைவுக் கல் மற்றும் விகாரைக் கட்டுமானங்கள் தொடர்பாக அறிக்கை வழங்க பொலிஸாருக்கும், தொல்லியல் திணைக்களத்துக்கும் கட்டளை பிறப்பித்துள்ளார்.
முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறி விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது என்று குருந்தூர்மலை ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் கடந்த மார்ச் மாதம் 2ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் எடுக்கப்பட்டது.
நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர்மலையில் விகாரைக் கட்டுமானங்கள் நடைபெறுகின்றன என்று தெரிவிக்கப்படும் நிலையில், மாவட்ட நீதிவான் நேற்று அங்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பிரதி செலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாதியுடன், அரச சட்டவாதி நிசாந் நாகரட்ணம் ஆகியோரும், தொல்லியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளரும் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
அதேவேளை, தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக நற்பணிமன்றம் கல்வெட்டை நிறுவியது என்று பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். பெயர்ப்பலகை அமைக்கப்பட்டது சட்டவிரோதமான செயற்பாடு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.