தமது முன்னாள் காதலியின் நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக நேற்று வரை பதவி வகித்தவருமான பேராசிரியர் ஆஷு மாரசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக காணொளி மற்றும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் வெளியிட்ட காணொளி உண்மையானதல்ல என்றும் அது எடிட் செய்யப்பட்டது என்றும் ஆஷு மாரசிங்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆஷு மாரசிங்க மீது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
ஆஷு மாரசிங்க நாய் ஒன்றை பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது போன்ற படங்கள் மற்றும் வீடியோகளையும் அவர்கள் அந்த செய்தியாளர் சந்திப்பில் காண்பித்தனர்.
ஆஷு மாரசிங்கவுக்கு எதிரான இந்த ஊடக சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர், ‘ஜனாதிபதியின் ஆலோசகர்’ எனும் பதவியை ஆஷு மாரசிங்க ராஜிநாமா செய்தார்.
”இந்தப் பொய்யான நிகழ்வு இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது; எனவே இது குறித்து நான் மேற்கொண்டு எதுவும் சொல்லப்போவதில்லை,” என்று ஆஷு மாரசிங்க கூறியுள்ளார்.