வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு காணி ஆணைக்குழு ஊடாகத் தீர்வு காண வேண்டும் என்று ஜனாதிபதியிடம் பல தடவைகள் வலியுறுத்தியுள்ளோம். தமிழர் பிரதேசங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடைமுறைச்சாத்தியமான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேய்ச்சல்தரைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. அந்தப் பிரதேசங்களில் மந்தை மேய்ப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காணி விடுவிப்புப் தொடர்பில் பேச்சுக்களில் ஈடுபடும் தரப்பினர் இந்த அடிப்படைப் பிரச்சினை தொடர்பில் அவதானம் செலுத்துவதில்லை.
முறையான மேய்ச்சல் தரை இல்லாததால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள், பசுக்கள் வனவளப் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதிகளில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன.
அதனாலேயே சட்ட விரோதமான முறையில் மாடுகள் இறைச்சியாக்கப்படுவதும், கால்நடைகள் கொல்லப்படுவதும் சாதாரணமாகியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணப்படும் மேய்ச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அத்தியாவசியமானது.
காணிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாங்கள் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை. ஆனால் இந்த அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேவையற்ற விடயங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது – என்றார்.