காங்கேசன் துறைமுக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக துறைமுக கட்டுமானங்களை விரைவாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இன்று (ஜனவரி 7) சனிக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அடங்கிய குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
காங்கேசன் துறைமுக அபிவிருத்தி பணிகளில் வடக்கு மாகாண சபை எவ்வாறான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தலைமையிலான குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக இறங்குதுறை மற்றும் சுங்கத் திணைக்கள கட்டுமானங்களை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்ததுடன் எதிர்வரும் மாதங்களில் இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனை முன்வைக்கப்பட்டது என்றும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.