நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் மக்கள் தொடர்ந்தும் பல இன்னல்களை அனுபவித்தே தமது போக்கவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர் போக்குவரத்துப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்பது மக்களது கேள்வியாகவே இருக்கின்றது.
வடாதாரகைப் படகு சில நாட்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் படகே தற்போது மக்களது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது கடும் காற்று நிலவுவதுடன் அதிக பயணிகள் நாளந்தம் தமது தேவைகளுக்காக நெடுந்தீவு வந்து செல்கின்றனர்.
இன்றைய தினம் (ஓக்டோபா 18) காலையில் 175ற்கு அதிகமான பயணிகள் நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி தமது பயணத்தினை மேற்கொண்டனர்.
நெடுந்தாரகைப்படகு நீண்ட நாட்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் தரித்து நிற்பதுடன் துருப்பிடித்த நிலையில் மேலும் பழுதடைகின்ற தன்மையே காணப்படுகின்றது அது தொடர்பாக உரிய நிர்வாகத்தினர் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்.
குமுதினிப்படகும் கடந்த பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் தரித்து நிற்பதுடன் அதனை திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை குமுதினிப் படகில் பணியாற்றும் ஊழியர்கள் மாத்திரம் நாளந்தம் குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் வந்து பணியாற்றுவதனை உறுதிப்படுத்தும் முகமாக கையெழுத்திட்டு செல்வதனை அவதானிக்க முடிகின்றது.
எதிர்வரும் நாட்கள் கடும் வாடகைக்காற்று ஆரம்பமாகவுள்ளதுடன் மழைகாலமாகவும் உள்ளமையால் மக்களது போக்கவரத்து நிலமையினைக் கருத்திற் கொண்டு உரிய அதிகாரிகள் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்பது நெடுந்தீவு மக்களது வேண்டுகோளாக காணப்படுகின்றது.
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குரத்திற்கு பொறுப்பாக செயற்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் உள்ளுர் அரச திணைக்களங்களும் மிக விரைவாக படகுகளை திருத்தம் செய்து இயல்பான போக்குவரத்திற்கு வழியமைக்க வேண்டும்.