குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் நிகழ்ச்சி திட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிறுத்தப்பட்டமைக்கு , பயனாளிகள் தெரிவில் உள்ள அதீதமான அரசியல் தலையீடே காரணம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஜனாதிபதியின் , இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு பிரதானமான காரணம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த ஆக குறைந்த கல்வி தகமையுடையவர்களுக்கு அரசவேலை வாய்ப்பினை வழங்குவதன் ஊடாக அவர்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும்.
இந்த நோக்கத்திற்கு ஏற்ப பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இராணுவம் மூலம் மீளாய்வு செய்யப்பட்டு இராணுவம் தமது பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியிருக்கின்றது.
அதற்கமைய வடகிழக்கு மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் பலர் ஜனாதிபதி எதிர்பார்த்த தகமைகளை கொண்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன் அவர்களில் பலர் அதீத அரசியல் செல்வாக்கினால் உள்செருகப்பட்டவர்களாகவும், சமூர்த்தி பயனாளிகள் அல்லாத, சொந்த வீடு வைத்திருப்பவர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.