ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Julie Chung குழுவினர் கடந்த வியாழக்கிழமை ( மே16) நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது நெடுந்தீவில் உள்ள கடற்தொழிலாளர்கள் வாழ்வாதார ரீதியாக எதிர்கொள்கின்ற சவால்கள் தொடர்பில் நெடுந்தீவு கடற்தொழில் சங்கங்களின் சமாச தலைவர் ப.லீலியான்குருஸ் மற்றும் உறப்பினர்களை அலை ஓசை கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) மற்றும் தீவக மகளிர் அமைப்பின் நெடுந்தீவுக்கான செயற்பாட்டாளர்களையும் சந்தித்து தற்போதைய நெடுந்தீவின் நிலமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.
நெடுந்தீவு உள்ளூர் மற்றும் கடற்போக்குவரத்து , உள்ளூர் வீதிகளின் மோசமான நிலை, இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் அதன் பாதிப்பு, உள்ளூர் மக்களின் வாழ்வாதார நிலைமைகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதாக சமாச தலைவர் தெரிவித்துள்ளார்.
விஜயத்தின் போது நெடுந்தீவிலுள்ள வரலாற்று முக்கியத்துவமுள்ள சுற்றுலா இடங்களையும் குழுவினர் பார்வையிட்டு சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.