இலங்கையில் பெண் ஒருவர் அரிய முழு கால எக்டோபிக் கர்ப்பத்தின் பின்னர் சிசேரியன் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள டி சொய்சா பெண்களுக்கான வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் சிசேரியன் அறுவை சிகிச்சையின் பின்னர் குழந்தையை வெற்றிகரமாக பிரசவிக்கச் செய்துள்ளனர்.
கருவுற்ற முட்டை கருப்பைச் சுவருக்கு வெளியே ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது நிகழும்போது, அது எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.
அடிவயிற்று கர்ப்பம் அல்லது எக்டோபிக் கர்ப்பம் மிகவும் அரிதாகவே நிகழ்வதாகவும், புள்ளிவிவரங்களின்படி 30,000 கர்ப்பங்களில் ஒன்று மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவர் சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் கருப்பைக்கு வெளியே கரு வளர்ந்திருப்பதை வைத்தியர்கள் அவதானித்தனர்.
குறித்த இளம் தாயை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது கரு 28 வாரங்களாக இருந்தது.
இந்தநிலையில், இது மிகவும் அரிதான கர்ப்பம் என்பதால், அவரை கொழும்பிலுள்ள டி சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.
இதனையடுத்து அவர் டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரு வளரும் வரை 34 வாரங்கள் வரை அவரை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைத்தியர்கள் வைத்திருந்தனர்.
இந்தநிலையில், வைத்தியர்கள், கடந்த வெள்ளிக்கிழமை சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெற்றிகரமாக பிரசவிக்க செய்துள்ளனர்.
டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.