நெடுந்தீவில் வாழும் உறவுகளிடம் (சமூக ஆர்வலர்கள்) அன்பான வேண்டுகோள்!
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பில் ஊரில் உள்ள அனைத்து அமைப்புக்களுடனுமான கலந்துரையாடல் 11.09.2021 சனிக்கிழமை நேற்று முந்தினம் நடைபெற்றது.
அதில் விவசாய செயற்திட்டக்குழுவினரால் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்:-
🔶 நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாய அபிவிருத்தி செயற்திட்டத்தில் சமூகப்பற்றுள்ள உறவுகள் அனைவரையும் (ஆண், பெண் இருபாலாரும் இளையோர் முதல் பெரியோர் வரை) இணைந்து தோள்கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
🔶 விவசாய நடவடிக்கைக்கு தேவையான நிதி, பொருத்தமான காணிகள், பயிரிடுவதற்கான விதைகள், நாற்றுக்கள் வழங்கப்படுவதுடன் காணிகளை அறிக்கைப்படுத்தல், தயார்படுத்துதல் போன்றவற்றிற்கு தேவையான ஒத்துழைப்புக்கள் பெற்றுத்தரப்படும்.
🔶 இந்த விவசாய செயற்திட்டத்தில் இணைந்து செயற்படும் உறவுகள் ஒவ்வொருவரினதும் செயற்பாடுகள் அனைத்தும் தினமும் பதிவுகள் மேற்கொள்ளப்படும். இப்பதிவுகள் செயற்திட்ட குழுக்களின் பிரதிநிதிகள், செயற்திட்ட முகாமைத்துவ குழு உறுப்பினர்கள், நெடுந்தீவு ஊரும் உறவும் அலுவலக உத்தியோகத்தர் என்பவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட வகையில் சேகரிக்கப்பட்டு பேணப்படும்.
🔶 சேகரிக்கப்படும் இத்தரவுகளுக்கமைவாக ஊரின் விவசாய அபிவிருத்தி பணியில் உறவுகள் பங்கெடுக்கும் ஒவ்வொரு நாட்களுக்குமான வெகுமானமாக இலாபத்தின் பங்குகள் தீர்மானிக்கப்பட்டு செயற்திட்ட நிறைவில் அவர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகை பணம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
🔶 இந்த விவசாயச் செயற்திட்டமானது ஆரம்பம் முதல் விளைச்சல் பெறப்பட்டு அவை சந்தைப்படுத்தல் பிரிவினரால் விற்பனை செய்யப்பட்டு செலவு தவிர்ந்த இலாபமானது பங்கிடப்பட்டு பணியில் பங்கெடுத்த உறவுகள்(சமூக ஆர்வலர்கள்) அனைவருக்கும் வழங்கப்படும் வரையிலான ஒட்டுமொத்த செயற்பாடுகளும் விவசாயச் செயற்திட்ட முகாமைத்துவக் குழுவினராலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
🔶 குறிப்பாக சில மாதங்கள் மாத்திரமே உறவுகள் குழுக்களாக இணைந்து இப்பணியில் ஈடுபடவுள்ளீர்கள் எனவே இதில் பங்கெடுப்பதன் மூலம் ஊரையும் உறவுகளையும் வளப்படுத்த வாய்ப்பாக அமைவதோடு, விவசாயத்தில் அனுபவமற்றவர்கள் ஏற்கனவே அனுபவம் வாய்ந்தவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தித் தரப்படும். விவசாய போதனாசிரியர்கள் களத்தில் உங்களுக்கான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்குவார்கள்.
🔶 குழுக்களாக நீங்கள் பணியாற்ற இருப்பதனால் உங்கள் தொழில்களையும் செய்துகொண்டு பகுதி நேரமாக ஆண்கள், பெண்கள் என இருபாலரும் இலகுவான முறையில் பணியாற்றுவதற்கு ஏற்ற வசதிகள் இதில் காணப்படுகின்றது.
இந்த விவசாய செயற்திட்டத்தில் நெல், வரகு, சாமை, குரக்கன், தினை, மொண்டி, வெங்காயம், மிளகாய், தக்காளி, பூசணி, பாகற்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீற்றூட், கீரை, வெண்டி, வர்த்தகை, வெள்ளரி, டுபாய்பூசணி, எள்ளு, சோளம், சணல் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை இயற்கை விவசாய முறையில் (organic) பயிரிடப்படவுள்ளன.
அன்பிற்குரிய எமது ஊரின் உறவுகளே எமது மண்ணினதும் உறவுகளினதும் சுபீட்சமான எதிர்காலத்திற்காக வேற்றுமைகளை களைந்து உறவுகளாக ஒன்றிணைந்து, இது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்தவர்களாய் இந்த விவசாய அபிவிருத்திப் பணியில் இணைந்து கொள்ள வேண்டுமெனவும், 18. 09. 2021 சனிக்கிழமைக்கு முன்பதாக உங்கள் பெயர் விபரங்களை நெடுந்தீவு ஊரும் உறவும்; அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளுமாறும் அன்போடு அழைக்கின்றோம்.
குறிப்பு:- இத்தகவலை ஊரின் உறவுகள் அனைவருக்கும் பகிரவும்.
நன்றி.
விவசாய மேம்பாட்டுப்பிரிவு,
நெடுந்தீவு ஊரும் உறவும் (DO-U)
தொடர்புகளுக்கு:- +94 (77) 840 0534 (அலுவலகம்)