இலங்கையில் தற்போதைய கொரோனா மரணங்களின் எண்ணிக்கையானது, தொடர்ந்து அதிகரித்துச் செல்லுமாயின் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் சுமார் 18,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பானது, இலங்கை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட நிபுணர்களின் சந்திப்பில் வைத்து இது தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது நேற்று (12) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இலங்கையர்களை பாதுகாக்க குறித்த அறிக்கையில் பல பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பயணத்தடையை கடுமையாக்குதல், மாகாண பயணத்தடையைக்கு பதிலாக மாவட்டங்களுக்கு இடையே பயணத்தடையை அமுல்படுத்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தல்
அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் மூன்று வாரங்களுக்கு தடை விதித்தல், பொதுக்கூட்டங்களை நடத்தாதிருத்தல், சுகாதார ஊழியர்களை பாதுகாத்தல்
பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள், நோய்த்தொற்று மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துதல், இந்த விடயங்களை உள்ளடக்கிய மேற்படி அறிக்கையானது உலக சுகாதார ஸ்தாபனமும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களாலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.