நெடுந்தீவு கிழக்கு கரையோரப்பகுதியில் சரியான இறங்குதுறைகள் இன்மையால் கடற்றொழில் உபகரணங்களை கரைசேர்ப்பதிலும் படகுகளை பாதுகாப்பதிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பிரதேச கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு கிழக்கில் பிடாரி அம்மன் கோவில் முதல் காளவாய் முனை வரையான கரையோரப்பகுதிகளில் கடற்றொழில்களில் ஈடுபட்டுவருவோர் இறங்குதுறைகள் இன்றிபெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கரையோரப் பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கரையோரப்பகுதிகளில் உரிய இறங்குதுறைகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் கரையோரப்பகுதிகளில் முருகைக்கற்பாறைகளும் காணப்படுகின்றன.
இதனால் தினமும் கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர்கள் தமது கடற்தொழில் படகுகளை கரையில் இருந்து கடலுக்குகொண்டு செல்வதிலும் கரைசேர்ப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன் கடும் காற்றுக்காலங்களில் படகுகளை பாதுகாக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.