நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் வேண்டுகோளிற்கமைய மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகத்தின்அறிவுறுத்தலின்படி நெடுந்தீவு பிரதேசசெயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் சாரதிஅனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவையானது இன்றையதினம் வெள்ளிக்கிழமை (ஏப். 26) காலை 9.00 மணி முதல் மாலை வரை நெடுந்தீவுபிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது 238 விண்ணப்பதாரிகளுக்கான மருத்துவ சான்றிதழ்வழங்கப்பட்டதுடன் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துப் பரீட்சையில் சுமார் 210 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களில் குறிப்பிட்ட தொகையினருக்கு பயிலுனர் அனுமதி சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் நெடுந்தீவு பதில் பிரதேச செயலர், கணக்காளர், மோட்டார் வாகன பரிசோதகர், மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலர்கள் , மோட்டார் போக்குவரத்து மருத்துவ பரிசோதனை குழுவினர், பிரதேச செலக அலுவலர்கள், ஊரும் உறவும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பரீட்சைக்கு தோற்றியோர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவைக்கு மேலதிகமாக
1) நீண்டகாலம் வரி அனுமதிப்பத்திரம் பெறாதவர்கள்
2) தொலைந்த வாகனப் புத்தகம் பெறுதல்
3) வாகன ஆசனங்களை அதிகரித்தல்
4) வாகன நிறம்மாற்றுதல்
போன்ற தேவைகளுக்காக வாகனப் பரிசோதனைகள் செய்யவேண்டியவர்களும் தங்கள் வாகனங்களை பரிசோதனையினை செய்துகொண்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளபோதும் நெடுந்தீவில் இருந்து சென்று வருதல் , தங்குதல் ஆகிய நிலைமைகளை கருத்தில் கொண்டு ஊரும் உறவும் நிறுவனத்தினர் விடுத்த எழுத்துமூலமான கோரிக்கையின் அடிப்படையில் இந்நடமாடும் சேவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.