இன்றும் (30 மார்ச்) சனிக்கிழமை நாளையும் (31 மார்ச்) ஞாயிற்றுக்கிழமை கரையோர ரயில் வீதியில் ரயில்களை இயக்குவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளவத்தைக்கும் கோட்டைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து ஒரு பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான குடிநீர் குழாயில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு திருத்தப் பணி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கரையோர ரயில் வீதியில் 25 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பின்னர் ரயில் சேவை மீளமைக்கப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இணையவழி முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பணியை முறையாக மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் கலந்துரையாடலின் போது தமது தொழிற்சங்கத்தின் முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் என அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.