இந்த ஆண்டில் சிறை,பொலிஸ் காவலில் 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், சித்திரவதைகள் தொடர்பில் 200 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழு, நாட்டில் இந்த வருடம் சிறை காவல் மற்றும் பொலிஸ் காவலில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், சந்தேகநபர்கள் பொலிஸ் காவலில் இருந்த போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, காவலில் உள்ள பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட மரணங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு இது தொடர்பான தகவல்களை தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வருடத்தின் முதல் 6 மாதங்களில் 200க்கும் மேற்பட்ட சித்திரவதை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
காவலில் இருந்த போது ஏற்பட்ட 6 மரணங்கள் மற்றும் தடுப்புக் காவலில் இருந்த 2 மரணங்கள் நிகழ்ந்தன என்று முறைப்பாடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்துடன் இணைந்து, சந்தேகநபர் பொலிஸ் காவலில் இருக்கும் போது, மரணம், சித்திரவதை மற்றும் ஏனைய பிரச்னைகளைத் தடுப்பதற்கான வரைவு வழி காட்டுதல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிஸாருக்கு வழங்கியது.
பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் அறிக்கை தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தையும் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.