அரசாங்க உத்தியோகத்தர்கள் கடமை நேரங்களில் கைபேசியைப் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தனியார் துறைகளைப் போன்று கைபேசிகள் உபயோகிப்பதற்கு தடை விதிப்பது போன்ற நிலைமையை அரச உத்தியோகத்தர்கள் ஏற்படுத்தி விடக் கூடாது என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார் ஹிபுஹின்ன தெரிவித்தார்.
பொது நிர்வாக அமைச்சில் 2023 ஆண்டுக்கான அரச சேவையில் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று காலை (ஜனவரி 2) நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவிததுள்ளார்.
சில தொழிற்சங்கத் தலைவர்கள் அரச சேவையின் போக்கு அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது என்று கருதுகின்றனர். அதேபோல் முழு நாளும் சமூக வலைத்தளங்களைப் பார்வையிடாமல் அனைவரும் பொறுப்பாக கடமையில் ஈடுபட வேண்டும். தனியார் துறையில் உள்ளதைப்போன்று கைத்தொலைபேசிகளை லொக்கர்களில் வைத்துச் செல்வது என்ற நிலைமைக்கு அரச துறையையும் மாற்றிவிட வேண்டாமென்று அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் தேவை ஏற்படும் பட்சத்தில் சுற்றிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.