யாழ்ப்பாணம்-பண்ணைச் சுற்றுவட்டப் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலை தொடர்பாக அனைத்து வழிகளிலும் உழைத்த, அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக உருத்திரசேனை அமைப்புத் தெரிவித்துள்ளது.
மேற்படி நாகபூஷணி அம்மன் சிலையை அகற்றுவதற்கு அனுமதிகோரி,யாழ்ப்பாணம் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க் கிழமை(மே 16) தள்ளுபடி செய்தது.
மேற்படி விடயம் தொடர்பில், உருத்திரசேனை அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில்,தீர்ப்பிற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பண்ணை ஸ்ரீ நாகபூசணி அம்மன் தொடர்பான வழக்கில் அம்மன் சிலையை அப்புறப்படுத்துவதற்கு கட்டளையிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை, நீதிமன்றால் நிறைவேற்ற முடியாதெனவும், குறித்த வழக்கை தொடர்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லையெனவும் கூறி, குறித்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக, உருத்திரசேனை அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியது.
இதேவேளை, யாழ்ப்பாணம்-பண்ணைச் சுற்றுவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகபூஷணி அம்மனின் திருவுருவச்சி லைக்கு, சித்திரைப்புத்தாண்டுத் திருநாளான கடந்த மாதம் 14 ஆம் திகதி காலை, உருத்திரசேனை அமைப்பினால் பாலாபிஷேகம் செய்யப்பட்டு, மலர்மாலை சாத்தப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.