இலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனைகள் எதிர்வரும் வாரங்களில் கடும் நெருக்கடியை எதிகொள்ளவுள்ளன. இந்த மாத இறுதியில் பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள் ஓய்வு பெறவுள்ளமையாலும், மருந்து இறக்குமதிக்கு போதிய நிதி விடுவிக்கப்படாமையாலும் இந்த நெருக்கடி நிலைமை தோன்றியிருக்கின்றது.
சிறிலங்காவின் தற்போதையே கட்டாய ஓய்வு நடைமுறை காரணமாக 60 வயதை அடைந்துள்ள 200 விசேட மருத்துவ நிபுணர்கள், 200 பொது மருத்துவர்கள், அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள 250 மருத்துவர்கள், 50 பல் மருத்துவர்கள் இந்த மாத இறுதியுடன் ஓய்வுபெறுகின்றனர். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதேவேளை, பயிற்சியை நிறைவு செய்த மருத்துவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கடமையைப் பொறுப்பேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றமை இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.
மறுபுறத்தில் சிறிலங்காவின் அரச மருத்துவமனைகளில் பெரும் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இருதய சத்திரசிகிச்சைகள் கூட ஒத்திவைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தாவிடம் கேட்டபோது, சுகாதாரத்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டார்.