நாடாளாவிய ரீதியில் நடைப்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபத்தில் சிக்கிய நிலையில் உடன் செயற்பட்ட பொலிஸ் அதிகாரி மாணவனுக்கு மருத்துவ வசதியை ஏற்படுத்திக் கொடுத்து மீண்டும் பரீட்சை எழுத வைத்துள்ள சம்பவமொன்று நேற்று(ஒக்ரோபர் 15) இடம்பெற்றுள்ளது.
பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள பரீட்சை மண்டபத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிலிஷா தேஷாஞ்சன போகுந்தர என்ற மாணவன் மஹிந்த கனிஷ்ட கல்லூரியில் கல்வி கற்றுவருகிறார்.
இந்நிலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக பொரலஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பரீட்சை மண்டபத்திற்கு வந்து முதல் வினாத்தாள் விடைகளை எழுதி முடித்திருந்தார்.
தொடர்ந்து இடைவேளையின் போது, மற்றொரு மாணவனுடன் கழிவறைக்கு செல்ல ஓடும்போது, கட்டடத்தின் நுனியில் கால் தடுமாறி விழுந்து, தலையில் படுகாயமடைந்த நிலையில் கதறி அழுதுள்ளார்.
அவ்வேளை பொரலஸ்கமுவ பொலிஸ்நிலைய சுற்றாடல் பிரிவின் பொறுப்பதிகாரி, பரீட்சை பாதுகாப்பு மேற்பார்வைக் கடமைகளுக்காக அவ்வேளையில் பிரசன்னமாகிய உப பொலிஸ் பரிசோதகர் தர்மதாச எகொட ஆராச்சி, இது தொடர்பில் பரீட்சை மண்டப அதிபருக்கு அறிவித்ததுடன், காயமடைந்த மாணவனை சப்-இன்ஸ்பெக்டருக்கு சொந்தமான காரில் வெரஹெர கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, பரீட்சைக்கு தோற்றும் மாணவன் என வைத்தியர்களிடம் கூறி, உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள் உடனடியாக மாணவனுக்கு சிகிச்சை அளித்தனர். அதன்படி, சப்-இன்ஸ்பெக்டர் மாணவனை மீண்டும் தேர்வு அறைக்கு அழைத்து வந்து, தேர்வு கூட அதிபர் மற்றும் தேவையான பொறுப்பான இடங்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து, விபத்தில் சிக்கிய மாணவனுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பரீட்சை எழுத அனுமதித்துள்ளார்.