யாழ் நகரில் நேற்று (மார்ச் 13) மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் கலந்துகொண்ட மாணவர்களின் சூழல் நேயமிக்க செயற்பாடு தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் 200ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று காலை யாழ் நகர்ப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடைபவனியில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவன்கள், ஆசிரியர்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பங்குபற்றினர்.
இந்த நடைபவனியின் போது வழங்கப்பட்ட குடிநீர் போத்தல்களை பாவனையின் பின்னர் வீதிகளில் வீசாத வகையில் யாழ் பரியோவான் கல்லூரியைச் சேர்ந்த சாரண சிறார்கள் முன்னோடியாக செயற்பட்டு, வீதி நெடுகிலும் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் வீசப்பட்ட ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்த வண்ணம் காணப்பட்டனர்.
இவ் விடயமானது சமூக ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்தவாரம் யாழ்நகர்ப்பகுதியின் முத்தவெளியில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகிய நிலையில் யாழ் பரியோவான் கல்லூரி மாணவர்களின் சூழல்நேயமிக்க செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது.
இத்தகைய மாணவர்களின் சூழல் நேயம் சார்ந்த செயற்பாடுகள் உண்ணிப்பாக கவனிக்கப்பட்டு பாராட்டப்படவேண்டியவை என இதனை நேரில் கண்ணுற்ற சமூகஆர்வலர்கள் தெரிவித்தனர்.