இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அரசுக்கு கூடுதல் வருவாயை உயர்த்துவதற்காக, அடுத்த ஆண்டு, மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
செல்வ வரி மற்றும் பரம்பரை வரி என்பனவே அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இதில் செல்வ வரி என்பது ஒருவர் கொண்டிருக்கும் சொத்தின் மீது விதிக்கப்படும் வரியாகும்.பரம்பரை வரி என்பது ஒருவர், தமது மூதாதையரின் சொத்தில் இருந்து ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்படும் ஒரு வகை வரியாகும்.
நாட்டின் நிதியை மேற்பார்வையிடும் புதிய நாடாளுமன்ற மேற்பார்வைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின்படி, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் இந்த வரிகளுக்குத் தேவையான சட்டத்தை உருவாக்குவதற்கு நிதி அமைச்சு பணிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் இந்த மேற்பார்வைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவின் அறிக்கையின்படி அரசாங்க செலவினங்கள் வருவாயை விட அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான பாதீட்டு பற்றாக்குறை 1.24 பில்லியன் ரூபாவாக இருந்ததாக குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் அரையாண்டில், ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை, மூன்று முக்கிய நிறுவனங்களான இலங்கை சுங்கம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றின் இலக்குகள் எட்டப்படவில்லை.
இதில் உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த அரையாண்டுக்கான 1.667 டிரில்லியன் ரூபா வருமான மதிப்பீட்டில் 41.81 சதவீதமான 696.94 பில்லியன் ரூபாவை மாத்திரமே வசூலித்துள்ளது.
அதே நேரத்தில் இலங்கை சுங்கம் இதுவரை மதிப்பிடப்பட்ட 1.22 டிரில்லியனில் 32.79 சதவீதமான 400.07 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது.
மதுவரி திணைக்களம் மதிப்பிடப்பட்ட இலக்கான 217 பில்லியனில் 41 சதவீதமான 88.963 பில்லியன் ரூபாவை மாத்திரமே வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.