வடக்கு மாகாண முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு தொழில் திணைக்கள சட்ட ஒழுங்கின்படி குறைந்தது 16 ஆயிரம் ரூபா கொடுப்பனவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று யாழ்.மாவட்டத் தொழில் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இந்த வேதனத்தை வழங்குவதில் மெத்தனப்போக்கு முன்பள்ளி நிர்வாகங்களால் கடைப்பிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
பருத்தித்துறைக் கல்விக் கோட்டத்துக்கு உட்பட்ட முன்பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் தொழில் திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றனர். இதில் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு விடயத்தில் இழைக்கப்படுகின்ற அநீதி தொடர்பில் தொழில் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டினர்.
தற்போது நடைமுறையில் உள்ள தொழில் திணைக்கள சட்டத்தின்படி முன்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு முன்பள்ளியை நடத்தும் நிர்வாகத்தால் மாதாந்தம் 16 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும்.
இதேநேரம் கல்வித் திணைக்களம் வழங்கும் 6 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து 23 ஆயிரம் ரூபா மாதாந்தம் வழங்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை வழங்கப்படும் வேதனத்தின் 20 வீதம் ஊழியர் சேமலாப நதிப் பங்களிப்பும், 3 வீதம் ஊழியர் நம்பிக்கை நிதியப் பங்களிப்பும் வழங்கப்பட வேண்டும் என்று தொழில் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.