பாதீட்டில் உரிய மாற்றம் வராவிட்டால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் தொழிற்சங்கங்களும் இணைந்து பாரிய போராட்டத்தை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் உப தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (செப்ரெம்பர் 7) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டினுடைய சூழல், பல்கலைக்கழக ஆசிரியர்களுடைய நிலைமை மற்றும் கல்வித் துறை சம்பந்தமான பல விடயங்களை ஆராய்ந்து தற்போது போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு வருடங்களாக இந்த பாரிய பொருளாதாரம் நெருக்கடியுடன் எங்களுடைய உறுப்பினர்களாக இருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பல சிரமங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய வரி பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் தொழில்புரியும் இடங்களில் போதிய அளவு வளங்கள் இல்லை. இதேநிலைமைதான் இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் முகம் கொடுக்கும் நிலைமையாக இருக்கிறது.
வாழ்க்கைச் செலவினுடைய அதிகரிப்பு வரிகளுடைய அதிகரிப்பு, இந்த நிலைமையில் அரசாங்கத்திடமிருந்து விதவிதமான உதவிகளும் காண முடியாத நிலை இருக்கிறது, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாரிய மாற்றம் தேவை என்பது எங்களுடைய கருத்து.
முக்கியமாக கல்வித்துறை சார்ந்த கொள்கைகளை நோக்கும் போது பெரும் குறைபாடுகள் உள்ளன.பொருளாதார நிலைமை என்று பார்க்கின்ற போது மிகவும் குறைபாடாக உள்ளது.
மக்களுடைய நிலைமையை கருதாமல் வெறுமனே சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளையும், அதனுடைய இலக்குகளையும் வைத்துக் கொண்டுதான் பொருளாதாரக் கொள்கைகளை அணுகிக் கொண்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக மின்சாரம், எரிபொருட்கள் விலை அதிகரிப்பு மற்றும் அரசமைப்புகளை தனியார் மயமாக்கும் நிலைப்பாடு வரவு செலவு திட்டத்தில் ஒரு சிக்கன அடிப்படையில் செலவுகளை குறைத்து பொது சேவைகளை சீர்குழையின் நிலைமை தற்போது உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.