பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு நாளை 13 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலப்பகுதியில் இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நிமித்தம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
பின்னர் மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்களை இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆயினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. மே மாதம் 29ஆம் திகதி இந்த பரீட்சைகள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நாளை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டன.
இந்தநிலையில் பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பான தீர்மானம் ஒனறு கல்வி அமைச்சால் இன்று (மே 12) அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஏற்கனவே காலதாமதமாகியுள்ள கல்விப் பொதுத் தராதார சாதாரணத் தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 29ஆம் திகதி நடைபெறுமா என்ற சந்தேகம் பல்வேறு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகள் விடைத்தால் மதிப்பீட்டு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமமே இதற்கான காரணமாகும்.
ஆயினும் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த, கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பரீட்சைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.