புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில் பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென தேர்தல் மறுசீர மைப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அனைத்து தேர்தல்களும், தொகுதிவாரி முறைமையின் கீழ் 60 சத வீதமும் மற்றும் விகிதா சார முறைமையின் கீழ் 40 சதவீதமும் இணைந்த கலப்பு தேர்தல் முறைமைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டுமெனவும், புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில், பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்படவேண்மென்றும் இணக்கம் காணப்பட்டதாக அக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான பாராளுன்ற தெரிவுக்குழு கூட்டத்தின்போது, இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த தெரிவுக்குழு எதிர்வரும் மார்ச் முதலாவது வாரத்தில் மீண்டும் கூடவுள்ளது.
இதேவேளை, அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக இருக்க பரிந்துரைப்பது மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாய மாக்குதல் என்ற முன்மொழிவுக்கும் இதன்போது கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டது.