பயணத் தடையை நீக்குவது தொடர்பில் கவனமாக ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படும் என்றும், அவ்வாறு தடையை நீக்குவதாயின் அதற்கு பதிலான மாற்றுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, பயணத் தடை தொடர்பில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், பயணத் தடையை நீக்குவது தொடர்பாக மிகக் கவனமாக ஆராய்ந்தே தீர்மானிக்கப்படும். அவ்வாறு கட்டுப்பாட்டை நீக்குவதாயின் அதற்கு பதிலாக தற்போதைய ஒழுங்குவிதிகளுடன் கூடிய மாற்றுத் திட்டமொன்று முன்னெடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தின் மேம்பாட்டுடன் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையிலான மாற்றுத் திட்டம் தயாரிக்கப்படும். எவ்வாறாயினும் இந்த விடயத்தில் மிகவும் புத்திசாலித்தனமாகவே தீர்மானிக்கப்படும் என்றார்.